Saturday, November 4, 2017

கனவுகள் விற்பனைக்கு !


" நான் மனிதன், ஒரு வண்ணத்துப்பூச்சியாய் உருமாறியதாய் கனவு காண்கிறேன். அல்லது நான் வண்ணத்துப்பூச்சி, ஒரு மனிதனாய் உருமாறியதாய் கனவு கண்டுகொண்டு இருக்கிறேன்" 
- ஸுயாங் ஸீ


கண்கொள்ளுமளவு முழுமையாய் விரிந்து கிடக்கிறது வனம். காலங்களின் ஈரம் அடர்த்தியாய் இறங்கியிருக்கும், சருகுகள் பூத்துக் கிடக்கும் மதிகெட்டான் சோலையில் ஊர்ந்து ஊர்ந்து தடம் தேடிச்செல்கின்றன பாதங்கள். கண்முன்னே ஒரு திசைமாணி, வடக்கை குறித்துக்காட்டிக் கொண்டே முன்னே செல்கிறது. நான் திசைமாணியைப் பார்த்துவிட்டு, வலதுபக்கம் திரும்பித் திரும்பி, கிழக்கை நோக்கி முன்னேறுகிறேன். ஆயுள் ரேகைகளை வட்டவட்டமாய் செதுக்கி வைத்திருக்கும் முதிய மரங்கள் நிறைந்த அடர்வனத்திற்குள் செல்லச் செல்ல, கிளைகள் சரசரக்கும் பேரோசை, பெயர் தெரியாத பறவைகளின் இடைவிடாட கீச்சொலி இவற்றிற்கு அப்பால், சிற்சிறிய குன்றுகளையும், குதித்தோடும் குறு நீரோடைகளையும் தாண்டியபடி கிழக்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறேன். முடிவில் வனத்தைத் தாண்டிய பெரிய புல்வெளியை அடையும் போது, சூரியக்கதிரின் முதல் கீற்று, செம்பழுப்பாய் ஒளிர்விடத் துவங்குகிறது.

வனத்திலிருந்து வெளியேறியதில் ஒருவித விடுதலை உணர்வு தோன்ற, வெளிச்சக்கீற்றினூடே வேகமாக நடக்கிறேன். வழியின் நடுவே கரிய குன்று போல் ஏதோ தடுக்க, தடுமாறி அப்படியே திகைத்தபடி நிற்கிறேன். பார்வைக்கு மிக அருகே, இரு யானைகள் மூர்க்கமாக புணர்ந்து கொண்டிருக்கின்றன. நான் அசைவற்று, சிறு சத்தமும் கொடுக்காமல், அவற்றின் ஆக்ரோசத்தை, கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அவற்றின் இயக்கத்துக்கு இடையூறாக சிறு ஒலி எழுந்தாலும் , அவற்றின் கோபம் என் மீது திரும்பி விடும் என்ற நிலையில், நான் சிலையாய் நிற்கையில், பீப், பீப் … பீப், பீப் … பீப், பீப் … என்று இடைவிடாத இடர் எச்சரிக்கை ஒலி !

திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை அணைத்தேன். பசியம் நிறைந்த வனத்தின் வாசனையும், பறவைகளின் கீறீச் ஒலியும், அகன்ற புல்வெளி தந்த குளுமையும், யானைகள் அருகில் திடுக்கிட்டு நிற்கும் நிலையும் இன்னும் நினைவில் நிழலாடியது. கண்களை கசக்கிக் கொண்டு பார்த்தால், பார்வையின் ஒளி தூரமாய் பரவுவதற்கு வழியின்றி, நான் படுத்திருந்த பத்துக்கு எட்டு அறையின் சுவரில் பட்டு எதிரொளித்தது. சோம்பல் முறித்தபடி எழுந்தேன். இரண்டு வாரங்களாய் துவைக்காத ஆடைகள் அறையெங்கும் விரவிக் கிடந்தன. ஜன்னல் இல்லாத அறையில் எப்போதும் இருக்கும் அழுக்கு வாடையோடு சேர்ந்து, லேசான முடை நாற்றமும் அடித்தது. யானைக்கனவின் கிளர்ச்சியையும், பயத்தையும் நினைத்துக் கொண்டே, தளம் முழுவதும் உள்ள 10 அறைகளுக்கும் பொதுவாக உள்ள கழிப்பறையை நோக்கி நடந்தேன்.

எனக்கு வரும் கனவுகள் எப்போதும் விசித்திரமானவை. நினைவு தெரிந்து முதன் முதலில் வந்த விசித்திர கனவு, எனது திருமணம் தொடர்பானது. அதுவும் எனது ஏழாவது வயதில். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள், வகுப்பில் ஒரு தோழியோடு பென்சிலையும், சாக்பீஸையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது தவறுதலாக அவளது பென்சிலை என் பாக்ஸில் வைத்து எடுத்து வந்துவிட்டதை, மாலை வீட்டுக்கு வந்த பிறகு தான் கவனித்தேன். அந்தப்பெண் தவறாக நினைத்துக் கொள்வாளே என்ற வருத்தம், அன்று தூங்கும் வரை மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவு கனவில், எனக்கும் அந்த தோழிக்கும் திருமணம் நடப்பது போல கனவு வந்தது. விடிந்ததும் ஒரு மாதிரி குதூகலமான மனநிலையில் தான் இருந்தேன் என்று இப்பொழுது வரை நினைவிருக்கிறது. வெகு நாட்களாய் அந்த கனவை மனதுக்குள் நினைத்துக் கொண்டே மகிழந்து கொண்டிருந்தது தனிக்கதை. மறுநாள், மிக வருத்தத்துடனேயே அந்த பென்சிலை அவளிடம் கொடுத்தேன். நான் வேண்டுமென்றே அந்த பென்சிலை திருடிக் கொண்டு சென்று விட்டதாகவும், அதனால் முதல் நாள் இரவு முழுவதும் என்னைத் திட்டிக் கொண்டிருந்ததாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவள் சொன்னாள். ஆக, எந்தப் பெண்ணாவது நம்மைத் திட்டினால், அன்று இரவு கனவில், அவளுடன் நமக்குத் திருமணம் நடக்கும் என்று ஒரு தியரியை வடிவமைத்துக் கொண்டேன்.

கனவுக்கான ”ஹேப்பி ஹவர்ஸ்” முடிந்ததும், அன்றைக்கான வழமைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்து விட வேண்டியது தான். மாநகரத்தின் பரபரப்பான பகுதியில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான மேன்ஷன்களில், உள்ளடங்கிப் போயிருக்கும் “சேவல் பண்ணை”யின் நான்காவது மாடியில், இரண்டு பேர் தங்கக்கூடிய சிறிய அறையில் தான் இப்பொழுதைய எனது இருப்பு. உடன் தங்கியிருப்பவன் கல்லூரித்தோழன் என்றபடியால், அறையில் பெரிய பாகப்பிரிவினை எதுவும் கிடையாது. அறை முழுதும் இருவரின் உடைகளும், புத்தகங்களும், பொருட்களும் தங்கு தடையின்றி எங்கெங்கும் விரவிக் கிடக்கும். அலுவலம் செல்லும் அவசரகதியில், பொதுக் கழிவறை வரிசையைத் தாண்டி, உடை மாற்றி, உடலுக்கு ஒருமுறை, காலுறைக்குள் ஒரு முறை என வாசனை திரவியங்களைத் தெளித்து விட்டு, கசகசக்கும் கழுத்துப் பட்டையையும், இடுப்புபட்டையையும் இறுக்கிக் கொண்டு, வெக்கு வெக்கென்று நேரத்திற்குள் ஓடி, மின்சார ரயிலைப் பிடித்து அலுவலகம் அடைந்து, அங்கே உணவகத்தில் தினமும் ஒரே மாதிரியாய், பரப்பி வைக்கப்பட்டிருக்கும்,  காய்ந்த ரொட்டிகளை ஊறவைத்துத் தின்னும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன்... "கனவுகள் எவ்வளவு வண்ணமயமாய், ஒவ்வொரு நாளும் புதுவிதமாய். எதிர்பார்ப்பின் அழகியலோடு தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்தகைய கனவுகளுக்குள்ளே சென்று சென்று வாழ வழி இருக்கிறதா ? "

விதவிதமான கனவுகள் வருகின்றதே, நாம் வாழ்கின்ற இந்த வாழ்வும் அப்படியே கனவாக இருந்தால் எப்படி இருக்கும் என்று அவ்வப்பொழுது யோசிக்கத் தோன்றும். தவறவிட்ட தருணங்கள், கொஞ்சம் முயற்சி எடுத்தால் வெற்றியடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகள், கொஞ்சம் நிமிர்ந்து நின்றிருக்கக் கூடிய சவால்கள், இன்னும் இளகிப்போயிருக்க வேண்டிய கோபங்கள் என்று எல்லாக் கோட்டையையும் அழித்து விட்டு முதலில் இருந்து விளையாடத் தோன்றும் சாகசமும் நன்றாகத் தான் இருந்தது. மனம் குதூகலிக்கும் வேளையில் வாழ்வை அப்படியே உறைந்து போக வேண்டுவதும், துவண்டு போகும் வேளையில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் அப்படியே அழித்துவிட்டு புதிதாய் துவங்கிவிட வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த சாத்தியக் கூறுகள் வாழ்வில் இல்லாவிட்டலும், கனவுகளில் நிரம்ப நிரம்பக் கிடைப்பதாகவே எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.

நிறைவேறாத உள்ளுணர்வு ஆசைகள் தான் கனவுகளாக வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியென்றால், இவ்வளவு ஆசைகள் உள்ளுக்குள் புதைந்து கிடக்கின்றன என்பதே வியப்பாக இருக்கும். வழமையாய் செல்லும் வாழ்க்கைக்கு வண்ணமயமான் கனவுகள் சுவாரஸ்யத்தைக் கொடுப்பதால், இப்பொழுதெல்லாம், அதை வரவேற்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன். இன்று வந்த கனவு இன்னும் வித்தியாசமானது.

இதுவரை அறிந்திராத ஒரு பெயரற்ற ஊரில், வார சந்தை போன்று நடந்துகொண்டிருந்தது. ஓவ்வொரு கடையின் முன்னும் பெருந்திரளான கூட்டம் குழுமியிருந்தது. தேசாந்திரியாக சுற்றித்திருந்து, அந்த ஊருக்குள் பெரும் களைப்புடன் நுழைபவனாக நான், கால் போன போக்கில் சந்தையினூடே நடந்து சென்று கொண்டிருந்தேன். நா வரண்டு, தாகமெடுக்க, தண்ணீர் தேடி ஒவ்வொரு கடையாக பார்த்தபடி நடந்தேன். வித்தியாசமாய் அலங்கரிக்கப்பட்ட ஒரு கடையில், மற்ற கடைகளை விட மிக அதிகமான கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. என்னவென்று பார்க்கின்ற ஆர்வத்தில், அந்தக் கடையை எட்டிப் பார்க்க, எனக்குப் பின்னால் வந்த கூட்டம், என்னையும் சேர்த்துத் தள்ளிக் கொண்டு கடை வாசல் வரை கொண்டு போய் விட்டது.

வடநாட்டு பாணி உருமாலும், பெரிய மீசையும், வித்தியாசமான உடையும் அணிந்திருந்த கடைக்காரர் என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். எனக்குத் தண்ணீர் தாகம் அதிகமாகி மயக்க வருவது போலத் தோன்றியது. என் தேவையைப் புரிந்து கொண்டவர் போல, ஒரு மண் குவளையில் தண்ணீர் கொடுத்தார். நான் ஆவலாக வாங்கி, நெஞ்சு நனைய வேகமாகக் குடித்தேன். நன்றியுணர்ச்சியாக, இந்தக் கடையில் ஏதாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தவனாய், எனது பர்ஸை எடுத்தேன். அதில் இருந்த சில்லரைக் காசுகளை எண்ணுவதற்கு முன்பாகவே கடைக்காரர், கைகளால் சைகை காட்டி நிறுத்தச் சொன்னார். முதலில் பொருளை உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு, பின் விலையைப் பேசிக் கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறினார். எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றவே, சரியென்று பொருட்களைக் காண்பிக்கச் சொன்னேன்.

அவ்வளவு கூட்டத்தையும் விலக்கி, என்னை உள்ளறைக்குக் கூட்டிச் சென்றார். சாணி போட்டு மெழுகியிருந்த மண் தரையும், தென்னங்கீற்று வைத்து கட்டியிருந்த கூரையும், ஒரு கிராமத்து வீட்டை நினைவுபடுத்தியது. அந்த அறை முழுவதும், சிறிதும் பெரிதுமாக மண் தாழிகள் மூங்கில் கூடைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிருந்தன. ஓவ்வொரு தாழியும் வெவேறு வடிவம் கொண்டிந்தன. தாழியில் இருந்தவை என்ன பொருளாக இருக்கும் என்ற ஆர்வத்தில், கைக்கு எட்டிய முதல் தாழியைத் திறந்து பார்த்தேன். அதில் மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிந்தன. மீன்கள் வியாரமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, அடுத்த தாழியைத் திறந்தேன் அதில் மேகப்பொதிகள் மிதந்து கொண்டிருந்தன. இது என்னவிதமான வியாபாரம் என்று குழப்பத்துடன், கடைக்காரரைப் பார்த்தேன். அவர் அர்த்தமான புன்முறுவலுடன், “இது கனவு வியாபாரம், இங்கே, பயமும், சிலிர்ப்பும், கூச்சமும், வெறியும், பக்தியும், மோகமும், சாகசமும், புலம்பலும், சிறியதும், பெரியதுமாக இப்படி ஏகப்பட்ட கனவுகள் விற்பனைக்கு இருக்கின்றன. எந்தக் கனவு வேண்டுமோ, அந்த கனவுக்குள் சென்று வாழ்ந்து பார்த்து பிடித்திருந்தால் வாங்கிச் செல்லலாம்” என்றார். ஆச்சரியமும், எதிர்பார்ப்பும் என்னுள் தொற்றிக் கொள்ள, "ஒரு கனவு வாங்குவதற்கு எத்தனை வாழ்க்கையை வேண்டுமானாலும் இலவசமாய் முயன்று பார்க்கலாம்" என்ற விளம்பரமும் கவரவே, ஒவ்வொரு தாழியாகத் திறந்து பார்த்தேன். அதில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்த தாழி கவனத்தை ஈர்த்தது. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை எனும் அந்த கனவுக்குள் நுழைந்து பார்க்க விரும்பினேன். அதைக் கடைக்காரரிடம் தெரிவித்ததும், அவர், அந்த தாழிக்குள் என்னை இறங்கச் சொன்னார். சுவாரஸ்யமும், பயமும் ஒரு சேர பிணைத்துக் கொள்ள, மெல்ல தாழிக்குள் இறங்கினேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு புழுவாய் நெளிந்து கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நேரம் தான், பிறகு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மூச்சு முட்டி, இருட்டறைக்குள் தள்ளுவது போன்று ஒரு உணர்வு. ஏதோ பயம் தொற்றிக் கொள்ள பதறிப் போய், " வேண்டாம், நான் சிட்டுக் குருவியின் கனவை முயற்ச்சிக்கிறேன், இது வேண்டாம்!" என கதற., வெளியே இருந்து கடைக்காரரின் சத்தம்... " இந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வை முடித்து விட்டு வா, பிறகு சிட்டுக் குருவியாகலாம்!". நானும் வேறு வழியின்றி சிட்டுக்குருவின் கனவை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி வாழ்கையின் துவக்கத்தில் உழன்று கொண்டிருந்தேன், அப்பொழுது…."

திடீரென்று, கனவு கலைந்து, முழித்துப் பார்த்தால், என் முதுகில் வண்ணத்துப்பூச்சியின் சிறகுகள் முளைத்து இருப்பது போன்ற உணர்வு. கொஞ்சம் நிதானித்ததும், நினைவு வந்தது. வழக்கமாய் கனவு தான் வரும். இப்பொழுது கனவுக்குள் கனவை வாங்குவது போல ஒரு கனவு வந்திருக்கிறதே என்று யோசித்தவாறே கண்களைக் கசக்கியபடி அமர்ந்திருந்தேன்.
"டீ சாப்பிடப் போகலாமா ?" என்று அறை நண்பன் கேட்கும் போது தான் முழுதாய், சுய நினைவு வந்தது. தலையணையை ஒரு புறமும், கனவை இன்னொரு புறம் ஓரமாய் வைத்துவிட்டு, தெருமுனையில் இருக்கும் கடைக்குத் தேநீர் குடிக்கக் கிளம்பினேன். ம்ம்ம், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருந்தால் மகரந்தத்துடன் தேன் குடித்திருக்கலாம்.

******
நன்றி மலைகள் இதழ் : http://malaigal.com/?p=10984

Friday, October 27, 2017

யாரை எதிர்க்க வேண்டும்?

நம்மை "அவுட் ஆஃப் பாக்ஸ்" யோசிக்க விடாமல், நம் எதிர்ப்பையோ ஆதரவையோ யாருக்குத் தரவேண்டும் என்று எதிர் தரப்பே நமக்கும் சேர்த்து மடைவெட்டி விடுவது தானே ராஜதந்திரம் (உடைச்சு சொல்லணும்னா, பார்ப்பனீயம்). திராவிட இயக்க வரலாற்றை எழுத வேண்டிய அத்தாரிட்டி, "தி இந்து" தான் என்று திமுகவினர் வாயாலேயே சொல்ல வைப்பதும், தமிழ் இன உணர்வாளர் "விஜய்" என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரே குரலில் சொல்ல வைப்பதும் கூட எதிர்தரப்பு மாஸ்டர் மைண்ட்களின் எண்ணங்களாக இருக்கலாம். அதற்காகவே சில்லுண்டிகளை வைத்து, பலவீனமான அல்லது உப்புக்குப்ப்பெறாத கருத்துக்களைப் பேச வைப்பது. அதில் கடுப்பாகும் எந்த நடுநிலையாளரும் தன்னையும் அறியாமல் அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தகுதியில்லாதவர்களுக்கு கம்பு சுற்றத் துவங்கிவிடுகிறார்கள்.
"பேரியக்கத்தின் அஸ்தமனம்" எழுதிய பத்திரிக்கையின் "திராவிட இயக்க வரலாற்றிற்காக" அதன்பக்கம் நின்று பேச திராவிட அபிமானிகளைத் தூண்டியது எது? தீவிர வலதுசாரிகளின் சல்லி வேர்களை அதற்கு எதிராய் லேசாய் சலம்ப வைத்தது தானே. அதே போல் தான், அன்னா ஹசாரேவின் கூட்டத்தில் முதல் ஆளாய்ப் போய் நின்றவர், பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு முன் "மரியாதை நிமித்தம்" சந்தித்துப் பேசியவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு என்ற இரண்டு வார்த்தைகளை உச்சரித்த மாத்திரத்தில், அதுவும் ஒரு திரைப்பட காட்சியில் கூறியதற்காக, சில அல்லக்கைகள் எழுதி வைத்ததை ஒப்பிப்பதைப் போல, படம் வந்த முதல் நாளே எதிர்க்கிறார்கள், அது பொதுவானவர்களுக்கும் எரிச்சலூட்டுகிறது, ஆகவே அவர்கள் நடிகரின் பக்கமிருந்து பேசத் துவங்கிவிடுகின்றனர்.
இந்த நாடகத்தின் அடுத்த காட்சி, கொஞ்ச நாள் கழித்து நடிகரும், ஆளும் கட்சியின் தேசியத் தலைவரும் கைகொடுத்து, கட்டிப் பிடித்து ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக இருக்கலாம். அப்போதும் நம்மையும் அறியாமல் நாம் எதிராளியின் விருப்பப்படி, வேறு யாருக்காகவாவது கம்பு சுற்றிக் கொண்டிருப்போம்.
******

Saturday, October 7, 2017

பணியிட பரமபதம் - “கரும்பலகை” புதினம் குறித்த வாசிப்பனுபவம்

கரும்பலகை


அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் கல்வி, பெரும்பகுதி அவனது ஆசிரியர்களின் செயல்பாட்டை மையமாக வைத்தே செழிப்படைகிறது. போதிய அடிப்படை வசதியும், வெளியுலகம் குறித்த பார்வையும் மறுக்கப்படும், தேசத்தின் உள்ளடங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு, ஒரே ஊற்றுக்கண் அவர்களது கல்வி மட்டுமே. தங்களுக்குக் கிடைக்கக் கூடிய மிக சொற்ப வாய்ப்புகளைக் கெட்டியாக பிடித்து மேல் எழுந்து, தங்கள் தலைமுறையையே முன்னேற்றிய எத்தனையோ கிராமப் புற மாணவர்களைக் கேள்விப் பட்டிருக்கிறோம். அத்தகையோரின் வெற்றிக் கதைகளில், நிச்சயம் அவர்களது பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கு முக்கியப் பங்கு இருக்கும். அத்தகைய பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள மனச்சுமையைப் பேசுகிறது எழுத்தாளர் அர்ஷியா எழுதிய ”கரும்பலகை” என்னும் நாவல். ”அரசு வேலை கிடைத்து விட்டது, அவர்களுக்கென்ன வேலை பார்த்தாலும் பார்க்காட்டியும் கை நிறைய சம்பளம், வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் விடுமுறை” என்ற பொதுப்பார்வைக்குப் பின்னால், அத்தகைய ஆசிரியர்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்சனைகள், மன உளைச்சல், சிவப்பு நாடா முறையில் சிக்கி சுண்ணாம்பாகும் அவலம், மிக நியாயமான கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாதது மட்டுமல்லாமல், அது தான் வழக்கம், இருக்கின்ற வட்டத்திற்குள் நின்று கொண்டு, தேர்வு சதவீதத்தை உயர்த்திக் காட்டு என்று கண்மூடித்தனமாக வாசிக்கப்படும் அறிக்கைகள், குறிப்பாக அரசு ஆசிரியப் பணியின் பொருட்டு, குடும்பத்தை விட்டு வேறு ஏதேனும் ஒரு குக்கிராமத்தில் தங்கியோ அல்லது தினம் நெடுந்தூரம் பயணம் செய்தோ வேலை பார்க்கும் பெண்களின் துயரம் ஆகியவற்றைப் பேசுகிறது நாவல்.

”போஸ்டிங் இலவசம், டிராஸ்ஃபர் காசு” – இது தான் நாவலின் கரு.  மனசாட்சிப்படி, வாங்குகிற சம்பளத்திற்கும், ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியப்பணிக்கும் உண்மையாய் இருக்கவேண்டும் என்ற முனைப்புடன் மாணவர்களிடம், தன்னால் ஆன மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டு வர முயற்சிக்கிறார், ஆசிரியை ராஜலட்சுமி. அவரின் அன்றாட ஆசிரியப்பணியின் நேர்க்கோட்டுச் சித்திரம் தான் “கரும்பலகை” நாவல். பள்ளிக்கு வந்து போகும் போக்குவரத்து தூரத்தைக் கடக்கவே தங்கள் மொத்த சக்தியையும் இழக்கும் இன்றைய அரசுத் துறை ஆசிரியர்களின் பிரச்சனையைப் பேசுகிறது நாவல்.  நாடகத்தன்மையோ, மிகையுணர்வோ துளியும் இன்றி, நிஜத்தில் பணபலமோ அரசியல் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண அரசுத்துறை ஆசிரியர் படும் கஷ்டங்களைத் தத்ரூபமாக சித்திரித்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.அர்ஷியா.

நாவலில் எங்கும் அறிவுரை சொல்கின்ற போக்கோ, அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து கிளர்ச்சி செய்யும் பகுதிகளோ இன்றி, இயல்பில் ஒரு பிரச்சனையை தன் எல்லைக்குட்பட்டு ஒரு ஆசிரியை எவ்வாறு எதிர்கொண்டு அதனை சமாளிப்பாரோ அதை அப்படியே எழுத்துக்களாக்கி இருப்பது, நாவலின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. ஆசிரியை ராஜலட்சுமியும், ”பணிமாறுதல்” என்னும் கதாபாத்திரமும் மாறி மாறி தாயக்கட்டை உருட்டி விளையாடுவது தான் கதை. பெயர் தெரியாத ஒரு ஊருக்கு, ராஜலட்சுமியை “பணிமாறுதல்” அனுப்பி வைத்தால், அவர் அங்கே இருக்கும் குறைகளை வென்று தன்னால் ஆன அர்ப்பணிப்பையும், உழைப்பையும் கொடுத்து அந்த “பணிமாறுதலை” தன் வசப்படுத்த முயல்கிறார். ராஜலட்சுமி கொஞ்சம் ஆசுவாசமாய் உணரத் துவங்கும் வேளை, “பணிமாறுதல்” மீண்டும் ஒரு தாயம் போட்டு அவரை வேறு ஒரு புது ஊருக்கு அனுப்பி வைக்கிறது. அங்கு மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலைமை. இப்படி இந்த இரண்டு பாத்திரங்களுக்கு இடையே நடக்கும் பரமபதம் தான் இந்தப்புதினம்.

 நேரடி போக்குவரத்து வசதியின்மை, மத / சாதி ரீதியான கட்டுப்பாடுகள், மூட நம்பிக்கைகள், கல்வி குறித்த போதிய விழிப்புணர்வு இன்மை, பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகளோடு தான், ஒவ்வொரு அரசுத்துறை ஆசிரியரும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சுயமுனைப்போடு கண்ணும் கருத்துமாய் வேலை செய்பவர்கள் ஒரு சிலர். ஆனால் பெரும்பான்மையினர், கட்டுப்பாடுகளும் சரியான மேற்பார்வையும் இல்லாததாலே எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல், மாதமானால் சம்பளம் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற மந்த நிலைக்கு வந்து விடுகின்றனர். அத்தகைய ஆசிரியர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள இந்த நாவல் ஒரு பாடமாக அமையலாம்.

கதையின் நாயகி, கொள்கைவாதப் பிடிப்புகள் கொண்ட, நூறு சதவீத தூய்மை வாதி, அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் கொடிய வில்லன்கள். அவர்களையும், குலைந்து சரிந்து கிடக்கும் இந்த அமைப்பு முறையையும் நாயகி எப்படி தன் மதியூகத்தாலும், போர்குணத்தாலும் வெற்றி கொள்கிறார் என்றெல்லாம் ”கதை” சொல்லாமல், யதார்த்தத்திற்கு மிக மிக அருகில் நின்று, ராஜலட்சுமி என்னும் ஆசிரியையின் பணி வாழ்வில் இருந்து சில நாட்களை, அவற்றிற்கே உரிய ஏற்றத் தாழ்வுகளோடு மிக இயல்பாக பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் அர்ஷியா. பணம் கொடுத்தாவது, சொந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிடலாம் என்ற எண்ணம் ராஜலட்சுமிக்கும் தோன்றுகிறது. என்ன அமைப்பு முறை இது, உயிரைக் கொடுத்து வேலை பார்த்தாலும் அதற்குரிய அங்கீகாரங்கள் சரிவரக் கிடைப்பதில்லை என்ற ஏக்கம் அவருக்கும் வருகிறது. அவை எல்லாவற்றையும் மீறி, தன்னை நம்பி, தன்னிடம் கல்வி கற்க வரும் பிள்ளைகளை, எப்படியாவது முன்னேற்றி அவர்களை சமூகத்தில் சிறந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற வேட்கை அவரைத் தொடர்ந்து, விடாமல் போராட வைக்கிறது. சிறுகச் சிறுகத் தான் விதைக்கும் தானியங்கள் சோலையாகும் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்குள் எப்பொழுதும் ஈரமாய் சுரந்து கொண்டே இருக்கின்றது. அந்தத் திறம் தான் அடுத்து எந்த ஊருக்கு மாற்றல் கிடைத்தாலும், அங்குள்ள கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே நம்ப வைக்கிறது. அவரது பயணமும் தொடர்கிறது.

எடுத்துக் கொண்ட கருவின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையில் கோர்வையான காட்சிகள், நேர்கோட்டிலிருந்து சிறிதும் விலகாத கதை சொல்லல், சொல்ல வந்த விஷயத்தை இயல்பாகப் பேசிய நடை, பலரும் அறிந்திராத ஒரு சமகாலப் பிரச்சனையின் உண்மையான பதிவு என்று பல விதங்களில் “கரும்பலகை” சிறந்ததொரு படைப்பாக ஆகியிருக்கிறது. அரசுத் துறை ஆசிரியர்களின் பணி மாறுதல், பணி நிரவல் தொடர்பான சிக்கல்களை ஒரு ஆசிரியையின் பார்வையில், நேர்த்தியாக எழுதியிருக்கிறது “கரும்பலகை”
வாழ்த்துகள், எழுத்தாளர் அர்ஷியா அவர்களுக்கும், புதினத்தைப் பதிப்பித்த “எதிர் வெளியீடு” நிறுவனத்தினருக்கும்.

******
கரும்பலகை (புதினம்)
எஸ்.அர்ஷியா
எதிர் வெளியீடு
பக்கங்கள்: 171
விலை: ரூ. 150.

******

Monday, September 18, 2017

கல்வி – மரணம் – பாடம்

தமிழகத்துக் கல்விமுறை என்பது மாணவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருப்பது. எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி என்பது, பின் தங்கிய நிலையில் இருக்கும் ஒரு மாணவனும் தொடர்ந்து எட்டாவது வரை பள்ளிக்கு வந்து, தொடர்ச்சியாக கல்விச் சூழ்நிலையில் இருந்து, முடிந்தமட்டும் கற்று, தனக்கும், தன் குடும்பத்தாருக்கும், சமூதாயத்திற்கும் பயனுள்ள வகையில் தன்னைத் தகவமைத்துக்கொள்வது. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால், அவனைக் கல்விச் சூழலில் இருந்து விலக்கி, வொர்க் ஷாப் வேலைக்கோ, களையெடுக்கவோ அனுப்பி விடாமல், அடுத்த மாதமே மறு தேர்வு வைத்து, அந்த கல்வியாண்டே அவனுக்கு அடுத்த வகுப்பில் படிக்க வாய்ப்பு வழங்குவது. சமூகத்தில் கடைக்கோடியில் இருக்கும் மாணவனும், கல்வியின் மூலம் ஏதாவது ஒரு நிலையில் தனக்கான ஊன்றுகோலைப் பிடித்து மேல் எழுந்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை இது. பள்ளிக்கல்வியில் வெகு சுமாராகப் படிக்கும் எத்தனையோ மாணவர்கள், தொடர் வாய்ப்புகள் மூலம் சிறந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்கு இந்த இலகுவான கல்வி முறை தான் காரணம். தகுதியில்லை என பெரும்பகுதியைக் கழித்துக் கட்டிவிட்டு சிறந்ததற்கு மகுடம் சூட்டும் முறை அல்ல இந்த கல்வி முறை, மாறாக சமூகத்தில் இருக்கும் அனைவருக்கும் தொடர் வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் மேலே அழைத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கம்.

நூற்றாண்டுகளாக சமூகத்தின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடும் இந்த அடிப்படையில் தான். ஒரு நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற எல்லா வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவது, அதில் ஊட்டச்சத்து இல்லாமல் இளைத்திருப்பவனுக்கு கொஞ்சம் க்ளுகோஸ் கொடுத்து அவனையும் தேற்றி, பந்தய தூரத்தை கடக்க வைப்பது.

போதுமான நீண்ட கால அவகாசமும், சரியாக முன்னெடுத்துச் செல்கின்ற தலைமையும் இருந்திருந்தால், ”நீட்” தேர்வையும் எதிர்கொள்ள தமிழகம் தயார் ஆகியிருக்கும். ஆனால் நீட் எதிர்ப்புக்கான காரணம் அதுவல்ல. பலதரப்பட்ட பண்பாடு, மொழி, பொருளாதார, சமூக நிலை உள்ள பரந்துபட்ட தேசத்தை, ஒற்றைக் கொள்கை மூலம் அடைக்க நினைக்கும் முட்டாள்த்தனத்துக்கு எதிராக கிளம்பு எதிர்ப்பு இது. ஏற்கனவே கல்வியிலும், பொருளாதாரத்திலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் தலைநிமிர்ந்து நிற்கும் மாநிலங்களை, தங்கள் பிடிவாதமான கடிவாளப் பார்வை கொண்டு, ஒடுக்க நினைக்கும் அடக்குமுறையாகத் தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மாநில இனங்களின் அடையாளங்களை அழிப்பதன் மூலமே, அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து இருக்குமானால், அது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பாதையாக நிச்சயம் இருக்காது.

சமீப காலத்தில், “நீட்” தொடர்பாக, மத்திய மாநில அளவில் நடந்த கலந்துரையாடல்கள் எதுவுமே ஆக்கப்பூர்வமான பாதையில் செல்லவில்லை. நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்று தெரிந்தே, மாநில வழிக்கல்விக்கு 85 சதம் ஒதுக்கீடு அளித்தது, மத்திய அமைச்சர்களின் பொய்யான வாக்குறுதிகள், மாநில அமைச்சர்களின் டெல்லி பயண நாடகங்கள் இப்படி எல்லாமே வெறும் கண் துடைப்பாகவே அமைந்தன. உடைத்து சொல்வதானால், இவையணைத்தும் மக்களை ஏமாற்றும் வேலையின்றி வேறு இல்லை. மத்திய மற்றும் மாநில அரசின் பிரதிநிதிகள் தொடர்ந்து தவறான வழிகாட்டுதல்களை செய்து கொண்டே இருந்தார்கள். எப்படியும் நீட் தேர்வுக்கு விலக்கு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பை மக்களின் மனதில் போலியாக விதைத்துக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் தங்கள் பதவிகளுக்காக நடந்த பேரங்களை எல்லாம், நீட் குறித்த விவாதம் என்று பரப்பினார்கள். விளைவு, நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல், ஒரு உயிர் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நூற்றுக் கணக்கான பிள்ளைகள், மனக்குமுறலோடும் ஆற்றாமையோடும் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களோ, தெரியவில்லை.

நம்மைச் சுற்றியுள்ள பெரும நிலை அரசியல் இப்படி தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது. பெரும் மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டால் ஒழிய இதற்கான உடனடித் தீர்வு கண்களுக்குத் தென்படுவது போல இல்லை. வழக்கம் போல, அடுத்த தேர்தலுக்காக காத்திருக்கத் தான் வேண்டியிருக்கிறது. மத்தியில் இருப்பவர்களுக்கு, நாமெல்லாம் கிள்ளுக் கீரைகள், இங்குள்ள மக்கள், அவர்களுக்கான முதல்தர குடிமகன்கள் இல்லை. மாநிலத்தில் இருப்பவர்களுக்கோ தங்கள் நாற்காலிகளைக் காத்துக் கொள்ள வேண்டிய பரிதாமான நிலை. இது மேலே இருப்பவர்களுக்கு மிக வசதியாய் போய்விட்டது. நினைத்தபடி எல்லாம் அடித்து ஆடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அரசன் குடிகளை நினைக்க மறந்தாலும், குடியானவன் உழுவதை நிறுத்தக் கூடாது என்பது தானே விதி. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய சிறுமியின் மன உறுதியை, ”மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கப் போவேன் என்று சொல்லிட்டு இருந்த, இப்போ மாட்டுக்கு வைத்தியம் பார்க்கப் போறியா” என்பது போன்ற எந்த சுடு சொல் வீழ்த்தியதோ தெரியவில்லை.  அவளின் மனவருத்தங்களைப் பகிர்ந்து கொண்டு, அவளுக்கு இருக்கும் மறு வாய்ப்புகள் பற்றி, மாற்றுப் பாதைகள் பற்றி மனம் விட்டு உரையாட, அந்த நேரத்தில் அவள் அருகில், அணுக்கமான ஒரு ஆசிரியரோ அல்லது அவள் உச்சநீதி மன்றம் வரை சென்று வாதாடத் துணை நின்ற ஏதேனும் அமைப்புகளோ இல்லாமல் போனார்களே என்ற ஆதங்கம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

கிராமப்புற, விளிம்பு நிலை மாணவர்களிடம் பேச வாய்பு கிடைக்கும் போதெல்லாம், நாம் நினைக்கின்ற கனவு தேசம் என்று ஒன்று இல்லவே இல்லை. இங்கே ஏற்றத்தாழ்வுகளும், அவநம்பிக்கைகளும், அவமானங்களும் எப்பொழுதும் நம் வழியை மறித்து நிற்கவே செய்கின்றன. அதற்காக எல்லாம், மனம் நொந்து, உங்கள் பயணத்தை இடையில் நிறுத்திவிடாதீர்கள். உங்கள் தொடர் முயற்சிகள் எப்பாடுபட்டேனும் திறக்காத கதவுகளைத் திறக்க வைக்கும், இல்லையென்றால், உங்கள் பயணத்துக்கான மாற்றுப் பாதையும்  இருக்கலாம், சரியான திசையைக் கண்டறிந்து தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதே சாதிப்பதற்கான வழி. முழுதும் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் தேவையில்லை. ஏற்கனவே இதைப் போன்ற இடர்களை எல்லாம் உடைத்து பலர் முன்னேறி இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை உங்கள் பயணத்தில் சந்திப்பீர்கள், அவர்களது வழிகாட்டுதல் உங்களுக்கு தக்க நேரத்தில் இளைப்பாறுதலைத் தரும். எப்படி இருந்தாலும், முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தன் வாழ்நாள் கனவான மருத்துவப்படிப்பு அநியாயமாக மறுக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்ட அந்தச்சிறுமியின் மனநிலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று முன்கூட்டியே அறியும் ஆற்றல் ஒருவருக்குமில்லை. ஆனாலும், இந்தப்பிரச்சனை தான் என்றில்லை, எதுவாக இருந்தாலும், நம்மைச் சுற்றியுள்ள பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி, அவர்களின் தயக்கங்களை விலக்கி, அவர்கள் மனதில் உள்ளதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்டு அவர்களுடன் உரையாடினால், அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் பல விபரீத நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க முடியும் என்று தோன்றுகிறது. இன்று அந்தச் சிறுமிக்காக கண்ணீர் சிந்துகிற ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஒரு மரணத்தைக் கொச்சைப் படுத்துகிறவர்களைப் பற்றி பேச எதுவுமில்லை.

(நன்றி மலைகள் : http://malaigal.com/?p=10748)
******

Saturday, June 3, 2017

வனம் புகுதல்


முதன்முதலாய் தனியாய் வேட்டைக்குச் செல்லும் வனவிலங்கு, தன் வேட்டை எல்லையை வரையறுத்துக் கொள்வதை ஒத்தது, தெரியாத புதிய ஊரில், தனிக்குடித்தனம் போவது. இது தான் நம்ம ஏரியா, இது நம்ம பஸ் ஸ்டாப், ஷேர் ஆட்டோ இந்த இடம் வரை வந்து நிற்கும் என்பதில் துவங்கி, தண்ணீர் கேன் வீட்டிற்கு வந்து போடுபவன் யார், பசும்பால் எங்கு கிடைக்கும், கேஸ் இணைப்பு வாங்க என்ன முறை, கேபிள் கனெக்‌ஷன் எப்போ வரும் என்பது வரை கிட்டத்தட்ட அதே வரிசையில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நினைத்த நேரத்தில், நினைத்த ஊருக்கு ஒரு ஷோல்டர் பேகையும், டிராவல் கிட்டையும் தூக்கிக் கொண்டு சென்று ஐக்கியமாகிவிடும் தனியனின் பயணத்தை இதோடு ஒப்பிட்டு விடாதீர்கள். இது ஒரு குடும்பஸ்தனின் இடப்பெயர்வு. 

இந்த இடப்பெயர்வில், ஏற்கனவே பழைய ஊரில், அடுக்கி வைத்திருந்த வரிசைக்கிரமமான அன்றாட நிகழ்ச்சி நிரல்களை கலைத்துப் போட்டு, புது வரிசையில் அடுக்க வேண்டும். அது பழைய வரிசைக்கு மிக நெருக்கமாய் அமைய வேண்டியது மிக முக்கியம்.

தண்ணீர், பால், கேஸ், கேபிள் என்ற அத்தியாவசியத் தேவைகளுக்குத் தொடர்ந்து, புது ஊரின் காய்கறி சந்தை, மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளைத் தரம் அறிதல் அடுத்த கட்டம். "பெங்களூருக்கு குடி வந்து பெங்களூர் மார்க்கெட்ல, பெங்களூர் தக்காளி வாங்கிட்டுப் போனாலும், மதுரைல கிடைக்குற பெங்களூர் தக்காளி மாதிரி இது இல்லை" என்பது தான் சமையல் துறை அமைச்சரின் கருத்தாக இருக்கும். அதையெல்லாம் அளவுகோலாகக் கொள்ளாமல், நியாயம் நேர்மை நீதி தர்மத்தின் வழியில் இல்லாவிட்டாலும், நம்மை வேற்றுக்கிரகவாசி போல் பார்க்காத, இரண்டாம் முறை செல்லும் போது தெரிந்தவர் போல் முகத்தை வைத்து லேசாக புன்னகை செய்கிற கடைக்காரர்கள் / சிப்பந்திகளைக் கொண்ட கடைகள், "நம்ம கடைகள்" ஆகிவிடும்.

சொந்த ஊரை விட்டு, வேறூருக்கு இடம்பெயரும் எவனும், தன்னுடன் தன் ஊரின் ஒரு பிடியை சேர்த்தே அள்ளிச் செல்கிறான். அது முதலில் வெளிவருவது மொழி வழியாகவே. புதுக்குடித்தனம் போனவுடன், பக்கத்திலுள்ள பலசரக்குக் கடையைத் தேடி, "அண்ணே, ஒரு அம்பது கிராம் விரல் மஞ்சள் கொடுங்கண்ணே!" எனும் போதே, பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கும் கடைக்காரர் நிமிர்ந்து பார்த்து, "சாருக்கு மதுரைப் பக்கமோ?" என்று இனம் கொண்டு கொள்வார். அவர் இழுக்கும் எக்ஸ்ட்ரா "ஓங்காரத்தில்" அவர் திருநெல்வேலி என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

நாம் இதுவரை வட்டார வழக்கில் தான் பேசுகிறோம் என்பதே புதிய ஊர் மக்களின் பேச்சைக் கேட்கும் போது தான் தெரிகிறது. காலப்போக்கில், நாம் வந்திருக்கும் இடமும் நம் இடம் தான் என்ற நிலையை மனம் எய்தும் போது,  இயல்பாய், நம்மையும் அறியாமல் அந்த ஊரின் விளிச்சொற்கள் நம் பேச்சு வழக்கில் இயல்பாய் கலந்திருக்கும். பிறகு அந்த ஊர்க்காரனாகவே மாறிவிட்ட பிறகு, ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சொந்த ஊர் கெத்தைக் காட்ட, "டேய், நானும் மதுரக்காரன் தான்டா" என்று ஹைடெசிபலில் கத்தி, நிரூபித்தால் தான் உண்டு.

******

காவி அரசியல்

இன்று "மோடி ஜி கி ஜே, பாரத் மாதா கி ஜே, குஜராத்தை பாருங்க ஜி, பாலாறும் தேனாறும் ஓடுது, உத்தர் பிரதேஷ்க்கு கிடைச்ச முதல்வர் மாதிரி நமக்கெல்லாம் எந்த ஜென்மத்துல கிடைக்குமோ தெரியலயே ஜி" என்று கூவும் காவி கோஷ்டிகள் எல்லாம் எங்கிருந்தோ வந்தவர்கள் கிடையாது. நேற்று வரைக்கும் திமுக, அதிமுக என்று ஏதாவது ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து அரசியல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் தாம். 

"இராஜாஜிக்குப் பிறகு தமிழ்நாட்டுல தலைவர்களே இல்லை. வெளியே மார்தட்டி சொல்லிக்க முடியாட்டியும், நம்மவான்னு சொல்லி மனசுக்குள்ள பூரிச்சுக்குறதுக்கு மேடம் இருந்தாங்க, இப்போ அதுவும் இல்லேன்னு ஆனபிறகு மோடிஜி தான் தமிழ்நாட்டைக் காப்பத்தணும்" என்று புல்லரித்துப் போய் இருக்கும் எலைட் கோஷ்டியைப் பற்றி நான் சொல்லவில்லை. இலாபமோ, நஷ்டமோ தன் நேரத்தையும் வாழ்க்கையையும் பணயம் வைத்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் தொழில்முறை அரசியல்வாதிகளைச் சொல்கிறேன்.


இவர்களுக்கு அரசியல் தான் வாழ்வு. திராவிடக் கட்சிகளில் வரிசை ரொம்ப நீளம், போதாக்குறைக்கு மாவட்டச் செயலாளருக்குப் பிறகு அவர் மகன் மாவட்டச் செயலாளர், வட்டத்திற்குப் பிறகு மகன் வட்டம், ஒன்றியத்துக்குப் பின் மகன் ஒன்றியம் என்று வாரிசு இட ஒதுக்கீடு வேறு. இந்நிலையில் கடைமட்டத்திலிருந்து மேல் அதிகாரத்திற்கு வர நினைக்கும் ஒருவனின் அடுத்த தேர்வு தேசிய கட்சிகள். இந்த அடிபடையில் தான், தொண்டர்களே இல்லாவிட்டாலும் கூட, அமைப்பு முறை குலையாமல் இத்தனை வருடம் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தாக்குப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, தங்களுக்கு அவர்களின் தயவு தேவைப்படலாம் என்ற எண்ணத்திலேயே அதனை அழிக்கும் வேலைகளை திராவிடக்கட்சிகள் மேற்கொள்வதில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், தேமுதிகவில் இருந்தும், மதிமுகவில் இருந்தும் கொத்துக் கொத்தாக நிர்வாகிகளை இழுத்த பெரிய கட்சிகள், காங்கிரஸ் அடிமடியில் எப்போதும் கை வைத்ததில்லை. 
இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலுமே காங்கிரஸ் தேய்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக தான் அரசியல் தொழில்காரர்களின் அடுத்த தேர்வு. (பர்செண்டேஜ் கமிஷன் அரசியலில் எப்பொழுதும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு பெரும் பங்கு இல்லை என்பது என் துணிபு).


இயல்பாகவே அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் ஒருவன், தலைமையின் கொள்கைகளையும், திட்டங்களையும் விதந்தோதவே செய்வான். அவனுக்கு வேறு வழியில்லை. அதே போல, தேசிய அளவில் இருக்கும் தலைமையும், அந்தந்த பிராந்தியத்தை பிரதிநுவப்படுத்துவது மாதிரியான திட்டங்களை அறிவிக்கும். அதை வைத்து உள்ளூர் நிர்வாகிகள், தலைமையிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கின் மூலமே தங்கள் பிராந்தியத்துக்கான நன்மைகள் கிடைக்கிறது என்ற தங்களையும் தங்கள் கட்சியையும், தங்கள் பகுதிகளில் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். 


துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தமிழகத்தை, கூட்டணி கட்சிகள் தயவில் பத்து எம்.பி.கள் வரை கிடைக்க வாய்ப்புள்ள ஒரு மாநிலம் என்பதைத் தாண்டி வேறு எப்படியும் யோசிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக இன்னும் மோசம். அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் என்பது புளிக்கும் திராட்சை. ஆனால், பாஜகவின் தேசியத்தலைமையை நம்பி, களத்திலிருக்கும் மாநில, மாவட்ட தலைவர்களின் நிலைமை தான் பரிதாபம். வெளியில் ஜபர்தஸ்தாக பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு, அவர்கள் ஒன்று குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருக்க வேண்டும் அல்லது தலையில் அடித்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மை தான். நேர்மையான முறையில்  கைகொள்ள நினைத்திருந்தால், அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். ஜெ மர்ம மரணத்திற்குப் பிறகான குழப்பம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் போராட்டம் என்று வரிசையாய் வந்த பிரச்சனைகளின் போதெல்லாம் "நாங்கள் உங்களோடு இருக்கிறோம்" என்ற பிம்பத்தை (பெயருக்காவது) உருவாக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் செய்வதெல்லாம், "என்னையா ஒதுக்கி வைக்கிற, உன்னை என்ன செய்கிறேன், பார்!" என்ற வெறுப்பரசியல் தான். ஆனால் இவர்களை நம்பி, களத்தில் இருக்கும் உள்ளூர் தலைவர்கள் தான் பாவம். மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், எதற்கெடுத்தாலும், மோடிஜியைப் பார், யோகிஜியைப் பார் என்று ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எப்படி வீதி வீதியாக கத்திக் கொண்டிருக்க, எலைட் குரூப்போ, டிவியில் விவாத நிகழ்ச்சியில் உண்மைக்குப் புறம்பான புள்ளி விவரங்களை அள்ளி வீசினோமா, அதன் ஹிந்தி மொழிபெயர்ப்பை டெல்லிக்கு அனுப்புனோமா, சில்லரையைத் தேத்துனோமா என்று காரியத்தில் கண்ணாக இருக்கின்றனர்.

ஆனால், இப்பொழுது தெரிகிறது, இவர்கள் தமிழ்நாட்டை மட்டும் குறிவைத்து எல்லாம் அடிப்பதில்லை. இவர்களின் அரசியலே வெறுப்பின் மூலம் வளர்ந்த அரசியல் தான். பிராந்தியங்களின் தனித்தன்மையை ஒழிப்பது இவர்களின் இரத்தத்தில் ஊறியிருக்கிறது. மொழியாகட்டும், கலாச்சாரமாகட்டும், பழக்கவழக்கங்களாகட்டும், உணவு முறையாகட்டும் எல்லாவற்றிலும் இருக்கும் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்தும் வெறி தான் இவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

"நீ செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதைச் செய்ய உனக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட நான் உனக்காகப் போராடுவேன்" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் தானே நாமெல்லாம். மண்ணின் மக்களுக்கான அரசியல் செய்யாமல், எதேச்சிகரமான உத்தரவுகளைப் பிறப்பித்து, அதன்படி தான் அனைவரும் நடக்க வேண்டும் எனறு கண்களை மூடிக் கொண்டு ஆணையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அழகல்ல. தன் பரிபாலனையின் கீழ் இருக்கும் எல்லா மக்களும் தம் மக்களே என்று எண்ணாத எந்த சாம்ராஜ்யமும், அது எவ்வளவு அசுர பலத்தோடு இருந்தாலும், நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை. வரலாற்றில் நீங்கள் வில்லன்களாகக் கூட அல்ல, கோமாளிகளாகவே பதிவு செய்யப்படுவீர்கள்.


******