Wednesday, February 24, 2010

நெப்ட்யூன் தேசத்து நேசமித்ரன்.



தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம்.  கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை.  கடந்த ஞாயிறு (21/02/2010) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சந்தித்தோம்.  கவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...

இன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் செய்தல் "போலச்செய்தல்". நதியின் வழியெங்கும் கூடவே பயணித்து வருகிறது கூழாங்கல். தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது. கூழாங்கல் போலவே வழவழப்பாகவும், ரேகையுடனும் தான் இருக்கிறது கோலிக்குண்டு. கூழாங்கல் கிடைக்கப் பெறாதவர்கள் கோலிக்குண்டுகளை வாயினுள் சுழற்றி மொழி விளையாட்டு நடத்த முயற்சிக்கும் போது வார்த்தை மேலும் சிதிலமடையத்தான் செய்யும். மாறாக சில நதிக்கரைப் பயணங்கள் கூழாங்கல்லை கண்டடைய வழிவகுக்கும். இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான். 

வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ? இலட்சிய வாசிப்பும் இருக்கிறது, இலக்கில்லா வாசிப்பும் இருக்கிறது.  வார்த்தை பிரயோகம் உணர்ந்து, இடம் பொருள் 'ஆ'வல் உணர்ந்து, இன்ன தேவைக்காக வாசிக்கிறோம் என்றுணர்ந்து இலக்கடைவதை இலட்சிய வாசிப்பாகக் கொள்ளலாம். தொடர்ந்த இலட்சிய வாசிப்பு புதிய புதிய வார்த்தைகளைக் கண்டடைய உதவும். இவ்வாறான சில வார்த்தைகளே சூழ் கொண்டு, கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.

பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம். மொழியை வளைத்து, வளர்த்து ஒரு வார்த்தை நீளாமலும், இடை நிறுத்தாமலும் பத்தியம் பார்த்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் மகப்பேறு வரை தான். கவிதை பிரசவித்த பின் பெற்றவன் இறந்து விடுவான். அது தான் நல்ல கவிதைக்கான அடையாளம். 

ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே மாற்ற முடியும். நம்மில் பலர் ஸ்ரீ எழுதிய "மாமாவின் கவிதை"யை வாசித்திருப்போம். இதில் ஒரே ஒரு வார்த்தையை சேர்க்கும் போது கவிதையின் முகமே மாறி வேறொரு தளத்துக்கு உயர்ந்து விடுகிறது.

"பொதுக் கழிப்பிடங்களின் சுவர்களில்
பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்
சாலையோர நீர்க் கழிப்புகளில்
திரையரங்கு இடைவேளைகளில்
என எங்கேயும் பக்கம் பார்த்து
ஒப்பீடு செய்து கொள்கிறேன் .
...................................................
எப்போது பார்ப்பினும்
தவிர்க்க முடியவில்லை,
இன்னும் சற்றே பெரியதாய்
அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...."

என் பெயர்

இந்த கவிதையில் சேர்க்கப்பட்ட ஒரே வார்த்தை "சுவர்களில்", இறுதியில் நமது நினைப்பை சுக்குநூறாக உடைக்கும் 'குறி'யீட்டுச் சொல் "பெயர்".

பல தரப்பட்ட நினைவுகளைக் கலைத்துப் போட்டு, நடுவில் இணைக்கும் "நார்" போன்று ஒரு வார்த்தையை வைத்து விளையாடும் கவிதை விளையாட்டு நுட்பமானது. வாசிப்பவனே நார் தேடி எடுத்து, உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகளைக் கோர்த்து சரம் தொடுத்து பூப்பந்து செய்து மணம் நுகர்ந்து கொள்ள வேண்டியது தான். இணைக்கும் நார் தென்படவில்லையென்றாலும் ஒன்றும் மோசமில்லை, உதிரிப் பூக்களுக்கும் அதே மணம் தானே.

இனிதே மணந்தது அந்த ஞாயிறு மாலை. நன்றி நேசமித்ரன்.

Friday, February 19, 2010

மதுரை பெரியாஸ்பத்திரி.



புதிதாக மணமுடித்த இளம் தம்பதியினர், இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்கின்றனர். செல்லும் வழியின் எதிர்புறம் பூக்கடை தென்பட வண்டியை நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மனைவிக்கு பூ வாங்க சாலையைக் கடக்கிறான் கணவன், எதிர்புறம் கணவனை நோக்கி வரும் லாரியைப் பார்க்கும் மனைவி, பதட்டத்தில் கத்தியபடி இரண்டடி முன்னால் விரைய, இந்த பக்கமிருந்து வரும் பேருந்தை கவனிக்கத் தவறுகிறாள். ஒரு காதோடு சேர்த்து ஒருபக்க முகத்தில் அடித்து ரோட்டுக்கு வெளியே தூக்கிப் போட்டுவிட்டு விரைகிறது பேருந்து. ரோட்டை கடந்து விட்ட கணவன், திரும்பிப் பார்த்து நிலைகுலைகிறான். மனைவியை மடியிலேந்தி கதறுகிறான். நெடுஞ்சாலை வண்டிகள் ஏதும் நிற்காமல் பறந்து கொண்டே இருக்கின்றன.  முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் இருக்கும் நிலையிலும், பைத்தியமாய் பதறிக் கொண்டிருக்கும் கணவனுக்கு ஆறுதல் சொல்கிறாள், செல்லிலிருந்து 108 ஐ அழைக்க வைக்கிறாள். மருத்துவமனை வந்து அவசர சிகிக்சை நடக்கும் போதும் கைகள் நடுங்கியபடி தன் தலையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் கணவனை பார்வையால் தேற்றிக் கொண்டிருக்கிறாள் அந்த இளம்பெண்.

ஞாயிறு காலை வீட்டிற்கு சொல்லாமல், திருப்பரங்குன்றம் மலைக்கு நண்பர்களுடன் விளையாடச் செல்கிறான் பத்து வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன். வீட்டிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது மலை.  நண்பர்களுடன் விளையாடிக் கொண்டே பாதி மலை ஏறி விடுகிறான். விளையாட்டின் உற்சாகத்தில் ஒரு பாறையிலிருந்து கால் தவறி கீழே விழுகிறான். தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து பயந்து போன மற்ற சிறுவர்கள், மயக்கத்தில் கிடக்கும் அவனை விட்டுவிட்டு ஓடி விடுகின்றனர். சற்று நேரத்தில் எதேச்சியாக அங்கே வரும் சில இளைஞர்கள் ஆட்டோவில் தூக்கிப் போட்டு கொண்டு வந்து சேர்க்கிறார்கள். முதலுதவி செய்யப்பட்ட பின், நர்ஸ் அவனது முகவரியை விசாரிக்க, தேம்பி தேம்பி அழுது கொண்டே இருக்கிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எட்டு மணிநேரம் ஆன பின்பும் அவனது பெற்றோருக்கு தகவல் சொல்ல முடியவில்லை. அவர்கள் இவனை எங்கே தேடிக் கொண்டிருக்கிறார்களோ?

தான் பெண் பார்க்கச் செல்லும் முதல் பெண்னையே மணம் முடித்துக் கொள்ள வேண்டும் என உறுதியாய் இருக்கும்  இளைஞன். ஒரே மகனுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து பார்த்து விட வேண்டும் என பற்பல ஃபோட்டோக்களை அலசி, கடைசியில் ஒரு பெண்ணை பார்க்க தாய், மகன் இருவரும் டூவீலரில் பெண் வீட்டிற்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் நாய் குறுக்கிட, ப்ரேக் அடித்து சரிந்த வண்டியிலிருந்து விழுந்த தாயின் பின் தலை நேராக ரோட்டில் மோத ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வண்டியின் இடிபாடுகளிலிருந்து எழும் மகன், தாயை கொண்டு வந்து சேர்த்து விட்டு, நான்கு மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறான். அந்த பெண்மணிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

வாரம் ஒரு முறை மட்டும் வரும் மாநகராட்சி குடிநீர் குழாயை ஒட்டி நீண்ட வரிசையில் காலி குடங்கள். தண்ணீர் வரப் போகின்ற நேரம், வரிசை நீள்கிறது, குடங்களை காக்கின்ற ஆட்கள் கூடுகிறார்கள். சின்ன குடம், ஓட்டை குடம், ஏதோ கணக்கு வழக்குப் படி குடங்கள் மாறுகின்றன. மாற்றுக் கருத்துகள் எழுகின்றன, வார்த்தைகள் தடிக்கின்றன், வாக்குவாதம் முற்றுகிறது. குடங்களின் வரிசை கலைக்கப்படுகின்றது. கலைத்த பெண்மணியின் தலை முடி கொத்தாக பிடிக்கப்பட்டு, அருகிலுள்ள மின்கம்பத்தில் அடிக்கப்படுகின்றது. ரத்தம் கொட்டத் துவங்க, காவல் நிலையம் போய் விட்டு, மருத்துவ மனைக்கு கொண்டு வருகிறார்கள். முகம் முழுதும் ரத்தம். முன் தலையில், நெற்றிக்கு மேல் பதினான்கு தையல்கள். அந்த வலி எல்லாம் தெரியவே இல்லை போல, அடுத்த 48 மணி நேரத்துக்குள் முடியைப் பிடித்த பெண்மணிக்கு இன்னும் அதிக தையல் போட வைப்பதற்கான சபதங்களைப் பற்றியே விடாது புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இன்னும்......

கணவனிடம் இரும்புத் தடியில் அடி வாங்கி தலை, முகம் முழுதும் கட்டுடனும், இடுப்பிலும் அருகிலுமாய் இரண்டு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும், காவ்ல்துறை வந்து விசாரிக்கும் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாய் சொல்லும்   டிகிரி படித்த பெண்...

பள்ளி விட்டு வரும் போது, ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து ஒரு வாரம் நினைவு தப்பி, இன்று தான் அம்மாவிடம் ரொம்ப பசிப்பதாய் சொல்லி அழும் சிறுமி, அதைப் பார்த்து வெடித்து அழுது, பின்பு சிரிக்கும் தாய்...

செல்போனில் பேசிச் சென்ற சுவாரஸ்யத்தில், பின்னால் வந்த பைக்கை கவனிக்கத் தவறி, தலை குப்புற விழுந்து நான்கு நாளில் பாதி குணமான தைரியத்தில் மருத்துவர் இல்லாத நேரம் பார்த்து செல்போன் எங்கே எனத் தேடும் கல்லூரிப் பெண்...

இன்னும் எத்தனையோ பேர், எத்தனையோ விபத்துகள், எத்தனையோ விதமான சிகிச்சைகள். 

மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் ஒரு நாளில் பார்த்த காட்சிகள்.  ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சுமையை இறக்கி வைக்கனும் போல இருந்தது, வைத்து விட்டேன்.