Wednesday, May 1, 2013

மொழிபெயர்ப்புக் கவிதைகள்


சினுவா ஆச்சிபி கவிதைகள் (தமிழில் வி.பாலகுமார்)



அகதிகள் முகாமில் ஒரு தாய்
------------------------------------------------
 எந்த மாதரசியும் பச்சிளம் குழந்தையும் கூட

தனது மகனின் இனமென்மைக்கு அருகிலும் வர முடியாது.

என்ற நினைவை அவள் விரைவில் மறக்கத்தான் வேண்டும்…


துருத்தும் விலாவெலும்புகளையும்

வற்றிய வயிறையுமுடைய குழந்தைகள்

வலியால் முனகிய படி குதித்தோடுகின்றன

குளிப்பாட்டப்படாத அவர்களின் மேனியிலிருந்து வீசும்

வயிற்றுப்போக்கின் துர்நாற்றம்

காற்றெங்கும் அடர்ந்திருந்தது


மற்ற தாய்மாரெல்லாம்

எப்பொழுதோ குழந்தைகளுக்கான

பிரத்யேக கவனிப்பை நிறுத்தியிருந்தனர்

ஆனால் அவளால் அவ்வாறு

இருக்க முடியவில்லை.

அவள் இதழோரம் வறட்டுப் புன்னகையும்

கண்களில் தாய் என்ற பெருமையையும்

இப்போதும் ஏந்தியபடியிருந்தாள்.


அவள் தனது வெற்று உள்ளங்கைகளினால்

மகனைத் தேய்த்துக் குளிப்பாட்டினாள்,

தான் வைத்திருந்த உடைமைகளின்

பொதி மூட்டையிலிருந்து

ஓர் உடைந்த சீப்பை எடுத்து

செம்பட்டை படிந்த அவனது முடியினை

நிதானமாக சிக்கெடுத்து தலை வாரினாள்.


இது அவர்களது முந்தைய வாழ்க்கையில்

அவன் பள்ளிக்குச் செல்லும் போது

காலை உணவுக்குமுன் அன்றாடம் நிகழக்கூடிய

ஒரு சாதாரண நிகழ்வு

ஆனால் இப்பொழுது அவளது இந்த செய்கை…

ஒரு சிறிய கல்லறையில்

மலர்களை வைத்து

அஞ்சலி செலுத்துவது போல இருந்தது.

***********

வண்ணத்துப்பூச்சி
---------------------------
 வேகம் எனபது வன்முறை

திறன் என்பது வன்முறை

நிறை என்பது வன்முறை


எடையற்று அலையூசலாடிப் பறக்கையில்

கனமின்மையில் பாதுகாப்பை நாடுகிறது

வண்ணத்துப்பூச்சி


ஆனால், பல்வண்ண படரொளி விழும்

சரளைக் கற்கள் பரவிக்கிடக்கும்

நெடுஞ்சாலையின் சந்திப்புகளில்

நமது ஒருங்கூடும் பிரதேசங்கள் இணைகையில்…


நான் திறம்பெருக்கி இறுமாப்புடன்

மோதலுக்குத் தயாராகத்தான் வந்தேன்

எனினும்

மென்மையானதொரு வண்ணத்துப்பூச்சி

ஒளிரும் மஞ்சள் நிவேதனத்தால்

எனது கடின மண்ணியக்கவசத்தின் மீது

தன்னையே முழுதாய் சமர்ப்பிக்கிறது

 *********************

வசந்தகாலபைன்மரம்
-------------------------------------------------

 தனித்திருக்கும் நேரங்களின் மீறலினூடே

பசுமை நினைவுகளை

தாங்கி நிற்கும் முன்னோடி இந்த பைன் மரம்


இயற்கையின் கிடைநிலை படிமத்தின்

கொடும் மரகதத்தீவிலும்

தனித்துக் காவல் நிற்கும் விசுவாசி இந்த மரம்


வெட்கங்கெட்டு பகட்டாக,

வஞ்சனைகளுடன் பவனி வரும்

துரோகத்தின் நிழலில்

தற்பொழுது

தொலைந்து நிற்கிறது இந்த மரம்


நேர்த்தியுடன் நிமிர்ந்து நிற்கும் உன்னத மரமே,

எந்தப்பள்ளி எனக்கு கற்றுக் கொடுக்கப்போகிறதோ,

உனது அமைதியான உறுதியான நாணயத்தை?

***********************
நன்றி: மலைகள் இணைய இதழ்

1 comment:

  1. தாயின் வாழ்வு கலங்க வைத்தது...

    வண்ணத்துப்பூச்சி ரசித்தேன்...

    அமைதியான உறுதியான மரம் அருமை...

    ReplyDelete