Tuesday, May 7, 2013

உப்பு நாய்கள் - பெருநகரத்து நிழல் மனிதர்கள்


மலைகள் இணைய இதழில் வெளியான “உப்புநாய்கள் - நாவல்” குறித்த எனது வாசிப்பனுபவம்.

-------------------------------------------
உப்புநாய்கள் - நாவல் / லக்ஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம் / விலை ரூ 180.
-------------------------------------------

பெருநகரத்தின் ரயில் நிலையங்களில், நெரிசல் மிகுந்த கடைவீதிகளில், சப்-வேக்களில் என நாம் அன்றாடம் கடந்து செல்லும் பாதைகளில் எத்தனையோ மனிதர்களை எதிர்கொள்கிறோம். மாத சம்பளம் வரும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டை அதற்கென வைத்திருக்கும் பிரத்யேக டைரியில் எழுதி வைத்துக் கொண்டு, பைசா கணக்காய் செலவு செய்யும், புறநகர்ப்பகுதியில் ஒரு சொந்தவீடு கட்டுவதை வாழ்க்கையின் ஆகச்சிறந்த லட்சியமாய்க் கொண்டிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஓர் ஒழுக்க நெறிக்கோட்டை தனக்குத் தானே வரையறுத்து, அதை வாய்ப்பு அமையும் போதெல்லாம் பிறருக்கும் உபதேசித்துக் கொண்டு, அப்படி வகுத்துக் கொண்ட கற்பனைக் கோட்டை தானே மீறும் போது அதற்கான வெற்று சமாதானங்களை நாள் முழுதும் மனனம் செய்து கொண்டு, ஊர் வாய்க்காக  வாழ்க்கை நடத்தும் மத்தியதர வர்க்கம் தினம் தினம் சந்திக்கின்ற, தமக்கும் கீழுள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டு ஒரு முகச்சுளிப்பில், ஒரு உச்சுக் கொட்டலில் ஒரு ஏளனப்பார்வையில் உதாசீனப்படுத்தி கடந்து செல்லும், தனக்குக் கீழுள்ளவர்கள் என்ற அலட்சியத்தில் ஒரு பொருட்டாக மதிக்காத சக உயிரினங்களைப் பற்றிய ரத்தமும், சதையும், களவும், காமமுமான ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த “உப்பு நாய்கள்” 
உப்பு நாய்கள் என்ற இந்த புதினத்திற்கு நான்கு கால்கள். ஒவ்வொரு கால்களிலுமாய் பிணைக்கப்பட்ட, வெவ்வேறு அளவுகளுடைய நான்கு சக்கரங்கள் சென்னை என்ற பெருநகரை மையமாய் வைத்து இயங்குகின்றன. ஒன்று வடசென்னையையும், ஆர்மீனியர் சர்ச்சையும், ஆந்திர எல்லையையும், இன்னொன்று ராஜஸ்தான் வரையிலும், மற்றொன்று ஆந்திராவின் உள்ளடங்கிய வரண்ட கிராமம் வரையிலும் இன்னொன்று மதுரையையும் தொட்டு சுழல்கின்றது.  

ராஜஸ்தானின் ஜெய்சால்மீரிலிருந்து புகுந்த வீடாய் சௌகார்பேட்டைக்கு வரும் உலகமறியா சேட்டுப்பெண்ணொருத்தி பணம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்ட, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு கருவியாக மதத்தை வைத்துக் கொண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் கூட்டத்தில் ஒருவனாய் இருக்கக்கூடிய, வீட்டு வேலை செய்பவர்கள் தாங்கள் சாப்பிடும் சாப்பாட்டையோ தங்கள் வாழ்க்கை முறையையோ வாழத் தகுதியற்றவர்கள் என்றெண்ணும் வர்க்கத்தின் பிரதிநிதியாய் இருக்கும் கணவனின் இயலாமையால், பொங்கும் தன் காமத்தைத் தணிக்க என்ன வடிகாலைத் தேடுகிறாள், அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்னும் கதை ஒரு வேர். திரையரங்க இருட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் கணவனை அருகில் வைத்துக் கொண்டு முகம் தெரியாத புதியவனின் சில்மிஷங்களுக்குத் தன்னைக் கொடுப்பவள், பின் அவன் மூலமாகவே இணைய உலகின் இருண்ட பக்கங்களில் துகிலுறியபட்ட தனது நிர்வாணத்தைக் காண நேர்கையில் தன்னை மாய்த்துக் கொள்கிறாளா இல்லை அதற்குக் காரணமானவனைக் கொல்ல முயல்கிறாளா என்று விரிகிறது ஒரு கிளை.

பதின்ம வயதில் தாயின் பராமரிப்பு சரியில்லாமல், இரந்துண்ணும் நிலைக்கு இறங்கி, பின் அதிகாரமே தனக்கான உணவைக் கொடுக்கும் என தீர்மானிக்கும் ஒருவன், கஞ்சாப்பொட்டலம் விற்பதில் துவங்கி பல ரசவாத வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து வளர்ந்து வரும் வேளையில் ஒரு துரோகத்தை சகிக்க முடியாமல் பழி முடித்து விட்டு பதுங்கி விடுகிறான். மாநகராட்சி இலவச கழிப்பறைகளை சுத்தம் செய்து காசு வசூலிப்பது, மஞ்சளாடை அணிந்து கோவில் திருவிழாவிற்கு நன்கொடை என்ற பெயரில் கல்லாகட்டுவது என்பதில் துவங்கி, பெருநகரத்தில் பிழைப்பதற்கு ஆயிரம் ஆயிரம் தொழில்கள் உண்டு. அவற்றில் பல விநோதமானவையாகவும், நம் கற்பனைக்கெட்டாததாகவும் கூட இருக்கின்றன. அப்படியான ஒரு தொழில் நாய்க்கறி சப்ளை. அசைவ உணவகங்களுக்கு நாய்க்கறியை விற்பது என்பதற்காகவே செய்முறை நேர்த்தியோடு ஒரு குழு இயங்குகிறது. அவர்களுக்குள் ஒரு நாளின் தேவைக்காக, எந்தந்த தெருவில் எத்தனை நாய்களைப் பிடிக்க வேண்டும், அவற்றை எவ்வாறு மடக்க வேண்டும், அதன் கறியை எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்ற தொழில்முறை சூட்சமங்கள் எல்லாம் கூட இருக்கிறது. அதையும் கற்றுத் தேரும் அவன், பின் பவ்வேறு குற்றங்களுக்குப் பின் சிறுமிகளைக் கடத்தி விற்கும் கும்பலுடன் இணைவது வரை செல்கிறது புதினம். தன் நிழலையும் தனக்குள் மறைக்கும் வித்தை கற்ற ஒரு பெயற்ற பறவையின் இருப்பாய் நீள்கிறது அவனது வாழ்க்கை. திறமையான கடத்தல்காரனான அவன், ஆர்மீனியன் தேவாலயத்தின் நிழல் யுத்தங்களையும், அந்தரங்க செயல்பாடுகளையும் முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான். ஆனாலும் அவனது நண்பர்களைப் போல தலைமை ஏற்று ராஜ்ஜியம் ஆளும் எண்ணமெல்லாம் இல்லாமல், பதுங்கி வாழும் பறவையாகவே இருக்க விரும்புகிறான். தேவனின் உருவத்தைப் பார்த்தவாறே வெறி கொண்ட சாத்தானின் முகம் கொண்டவளாய் குருதி சொட்ட தன்னைத் தானே அனுபவித்துக் கொள்பவளை அருகிலிருந்து பார்க்கும் போதும் சரி, யாருக்காகவும் எளிதில் திறக்காத தேவாலயத்தின் விடுதிக்கதவுகள் தனக்காக திறக்கக் காத்திருக்கும் போதும் சரி, அவன் மௌனியாகவே இருக்கிறான். இறுதியில் தன் இருப்பே புலனாகாதவாறு இருந்து இம்சித்து இம்சித்தே, தனது ஆரம்ப கால கூட்டாளியும், தற்பொழுது வேலை கொடுத்து வியூகத்தில் சிக்க வைக்கக் காத்திருப்பவனுமாகிய நண்பனை தற்கொலை செய்ய வைக்கிறான். பின் தன் அறியாமையால் தன்னைத் தொலைத்து பின் அதைக் கலையாக கற்றுத் தேர்ந்தவளின் கிளையில் அரூபமாக அடைகிறான், ஒரு நிழலற்ற பறவையைப் போல.

ஆந்திர தேசம் கடப்பா தாண்டி வெக்கை படிந்த ஜம்பலகுடு கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க தாய் தந்தையுடன் சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி அலுவலகங்களுக்கும், அபார்ப்மெண்ட்களுக்கும் கட்டட வேலைக்கு வரும் ஒரு சிறுமியின் பிரகாசமான கண்களின் காட்சி வழி விரிகிறது இன்னொரு வட்டம். அவளுக்கு தன் சிறிய கிராமத்தைத் தாண்டி வெளியுலகில் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆச்சர்யம். அதுவும் கடல் இருக்கிறது என்பதற்காகவே அவளுக்கு சென்னையை மிகவும் பிடிக்கிறது. அவளது கிராமத்தில் அவளது பெயர் ஸர்ப்பப்பெண். உடலெங்கும் வெம்மையைக் கொண்டிருக்கும் பாம்புகளைப் பிடித்து விளையாடுவது தான் அவளது பொழுபோக்கு. அவள் எப்போதும் தன்னையும் ஒரு பாம்பாகவே நினைத்துக் கொள்கிறாள். சரியான வாழ்வாதாரம் இல்லாமல் சொந்த மண்ணிலிருந்து சென்னை வந்த அவளின் குடும்பத்தையொத்த மக்களுடன் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அருகிலேயே அவர்களும் டெண்ட் அடித்து வசித்து வருகிறார்கள். சரியில்லாத சேர்க்கையினால் குடிக்கு அடிமையாகி கடைசியில் தன் மனைவியை இன்னொருவனுக்கு கூட்டிக் கொடுக்குமளவிற்கு சீரழிந்த தகப்பனின் மரணத்தை மௌனமாய் பார்க்கிறாள் அந்த சிறுமி. தன் கணவனின் சடலத்தையும் அடையாளம் காட்ட விருப்பமற்றவளாய் தன் தாய் மாறி இருப்பதை உணர்கிறாள். பின் பிழைக்க வழியறியாது, சென்னை வேண்டாம் என்று தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுக்கும் தருவாயில் தனக்காக அன்பு செலுத்தவும் ஒரு உள்ளம் இருப்பதை உணர்ந்து, அந்த தாய்மனம் கொண்ட யுவதியின் அரவணைப்பில் அடைக்கலமாகிறாள்.

குடுமபம் சகிதமாய் பிக்பாக்கெட் தொழில் செய்து வரும் மதுரையைச் சேர்ந்த ஒருத்தி தன்னைக் காத்துக் கொள்ள் வேண்டி தன் நாத்தானாருடனும், குடும்பத்துடனும் சென்னைக்கு வரும் சித்திரம் இன்னொன்று. மிகப்பெரிய அந்த நகரத்தின் ஜனத்திரள் அவளது தொழில் மூளைக்கு உவகை தருவதாக இருக்கிறது. அசிரத்தையான ஒரு நாளில் தொழில் பிசகி மட்டிக் கொள்ள நேர்கையில், காவல் நிலையத்தில் அவள் எதிர்கொள்ளும் சூழ்நிலை அவளுக்கு மிக விநோதமாகத் தெரிகிறது. வெளிப்படையாய் பங்கு கேட்கும், சிறு சிறு அடியாட்களிடமும் பணிந்து போகும் காவலர்களை பார்க்கையில் அவளுக்கு தான் இருப்பது காவல்நிலையம் என்ற பயம் கூட அற்றுப் போகிறது. பின் காவல் நிலையத்திலேயே அறிமுகமாகும் ஒருவனின் மூலமாக கடத்தல் பொருட்கள் எடுத்துச் செல்லும் குருவியாக மாறுகிறாள். பின்னொரு நாள் வர்த்தகம் செய்து கொள்பவனின் துரோகத்தால் சிறை செல்ல நேரும் போது, அங்கு தன் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் பழைய தோழியை சந்திக்கிறாள். அவளை வஞ்சித்து விட்டு தான் வந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் தனக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த முரட்டு ஜீவனின் மீது இவளுக்கும் புதியதோர் பிடிப்பு ஏற்படுவதாய் நீள்கிறது அவளது கதை.

இவ்வாறு நான்கு வெவ்வேறு அடுக்குகளில் பயணிக்கும் புதினத்தின் பிடி நூல் சென்னை என்ற மாநகரம். இருள்படர்ந்த நகர வீதிகளில் நடக்கும்  அன்றாடம் நம்மை வெகு சாதாரணமாக கடந்து செல்லும் இந்த மனிதர்களை, அவர்களின் வாழ்வை கூட இருந்து வாழ்ந்தது போன்று துல்லியமான ஒரு பார்வை புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. இந்த புதினத்தின் மொழி, பேசுபொருளுக்கு நெருக்கமாய் உணர வைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான முனைப்புடன் கட்டமைக்கட்டிருக்கிறது. மொத்தத்தில் பெருநகர இருட்டில் முகம் தொலைத்து அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் வாழ்க்கைப் படிமத்தின் ஒரு கீற்றினை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த “உப்பு நாய்கள்”

(வாசிக்க வேண்டியவற்றில் இந்த புத்தகம் இருக்கிறது என்று சொன்னவுடன், பரிந்துரை செய்தததோடு மட்டுமல்லாமல் அடுத்த நிமிடமே புத்தகத்தை கையில் கொடுத்து வாசிக்கச் சொன்ன நண்பர் ஸ்ரீதருக்கு நன்றி )

உப்புநாய்கள் - நாவல் / லக்ஷ்மி சரவணகுமார்
உயிர் எழுத்து பதிப்பகம் / விலை ரூ 180.

நன்றி : மலைகள் இணைய இதழ் : http://malaigal.com/?p=1905
******

1 comment:

  1. உப்புநாய்கள் நாவலை உடனே வாசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது தங்கள் பதிவு.
    'விளிம்பு மனிதர்களை
    விமர்சிப்பது சுலபம்
    விளிம்பில் நின்று
    பார்த்தால்தான் தெரியும்'
    என்ற விக்ரமாதித்யனின் கவிதை வரி ஞாபகம் வருகிறது. நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete