Monday, May 19, 2014

வாழ்த்துகள் திரு.பிரதமர் அவர்களே !

இலாபமோ, நஷ்டமோ இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள் இவர்கள் தாம். வளர்ச்சிக்கு முன்னுரிமை தருவோம் என்று பரப்புரை செய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். மாற்றுக்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்தவர்களுக்கும் சேர்த்து தான் “மோடி” பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொறுப்பில் இருந்தவர்களிடம் அதிகாரம் இல்லை, அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்கள் நேரடியாக எந்த முடிவுகளுக்கும் பொறுப்பேற்கவில்லை என்ற நிலையிலேயே கடந்த பத்தாண்டு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. தன்முனைப்பின்றியும், வேண்டாவெறுப்பாகவும் சூழ்நிலைக்கைதியாக தலைமைப் பொறுப்பை வைத்திருந்தவரிடமிருந்து, “எனக்கு 60 மாதங்கள் மட்டும் தாருங்கள், நான் வளமான எதிர்காலத்தைத் தருகிறேன்” என்று சூளுரைத்தவரிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது பதவியும், அதிகாரமும். அவர் அதனை எவ்வாறு பயன்படுத்தப்போகிறார், நாட்டின் இறையாண்மைக்கும், வளர்ச்சிக்கும், முக்கியமாக சிறுபான்மையினர், ஏழை எளியவர்கள் என நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் எவ்வாறு அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்க்கைமுறையை வழங்கப்போகிறார் என்று உலகமே உற்று நோக்குகிறது. மோடி அவர்களுக்கு மக்கள் அளித்திருப்பது வெற்றி அல்ல, மிகப்பெரிய வாய்ப்பு. 

பலமான எதிர்க்கட்சிகள் இல்லாமல், மிகப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருப்பவர்கள், தங்களுக்கான எல்லைக்கோட்டை தாங்களே நிர்ணயம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். இது மிகவும் சவாலான பணி. தங்களை நம்பி அருதிப் பெரும்பான்மை வழங்கியிருக்கும் மக்களுக்கு நேர்மைக்கேடு செய்யாமல் இருப்பதே நல்லது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருக்கும் நிலையில், ஊடகத்துறை எதிர்க்கட்சியாக செயல்படுவதே நல்லாட்சி வழங்க ஏதுவாயிருக்கும்.  வெற்று பிம்பங்களை ஊதிப் பெரிதாக்காமல் அரசின் தவறுகளை சரியாக சுட்டிக்காட்ட வேண்டிய கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்” - இது அனைவருக்கும் தெரிந்தது தான். குற்றங்களை எடுத்து உணர்த்துபவர்கள் இல்லையென்றால, அந்த அரசு தானே கெடும். அதே சமயம், எதிர்க்கட்சிகளும் வெறுப்பரசியலைக் கையிலெடுத்துக் கொண்டு, சாமான்ய மக்களை பயமுறுத்தும் வேலையை செய்யாமல் நாட்டின் வளர்ச்சிக்காகவும், அமைதிக்காகவும் பிரதமருடன் கைகோர்க்க வேண்டியது அவசியம். நல்ல திட்டங்கள் வரும் பொழுது, அரசியல் நிலை காரணமாக வாழ்த்த முடியாவிட்டாலும் மௌனமாக இருப்பது கூட சிறந்ததாக இருக்கும். அதை விடுத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் பிரச்சாரங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களுக்கு வழிவகை செய்யாமல் இருக்க வேண்டும். ஊழல் கறை படிந்து புரையோடிப்போயிருக்கும் அரசுத்துறை வழிமுறைகளையும், அதள பாதாளத்தில் இருக்கும் நிதிநிலைமையையும் சீர்செய்ய ஆளும்கட்சிக்கு சில காலம் தேவைப்படலாம். அரசியல் விமர்சகர்களும், நடுநிலையாளர்களும் அதற்கான நியாயமான் அவகாசத்தை அவர்களுக்கு வழங்குவதே சிறந்தது. 

முறையான சந்தைப்படுத்துதலும், கவர்ச்சிகரமான விளம்பரங்களும் ஒரு பொருளை நல்ல விலைக்கு விற்க உதவும். ஆனால் முறையான வாடிக்கையாளர் சேவையும், பராமரிப்பும் இருந்தால் மட்டுமே அந்த பொருள் சந்தையில் நிலைத்து நிற்கும். தனது தேர்ந்த அனுகுமுறையால் தெளிவான விளம்பர யுக்தி கொண்டு, இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி காஷ்மீர் முதல் கடைக்கோடி கன்னியாகுமரி வரை தனது பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைத்து, தான் வந்தால் மட்டுமே நாட்டுக்கு சுபிட்சம் பிறக்கும் என்று நம்ப வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மோடி. அரசியலை ”சேவை” என்பதைத் தாண்டி ஒரு தொழிலாக ஏற்றுக்கொண்டாலும் கூட, தனக்குக் கிடைக்கும் நியாமான ஊதியத்தைக் கொண்டு, அதன் வாடிக்கையாளர்களான மக்களுக்கு சிறப்பானை வசதிகளை செய்து கொடுக்க முடியும். இந்தத் தொழிலில் பரிவர்த்தனை அரசுக்கும், மக்களுக்கும் இடையே மட்டும் தான். இடைத்தரகர்களான பெருமுதலாளிகளுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டால் நலம். 

மக்கள் காத்திருக்கிறார்கள், கவனிக்கிறார்கள் ...!

வாழ்த்துகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் அவர்களே !

******

1 comment:

  1. (தமிழ்)நாட்டுக்கு நல்லது நடக்குமா?

    -மதன்

    ReplyDelete