Wednesday, January 25, 2017

வணக்கம் தோழர் !



ஜல்லிக்கட்டுக்கான போராட்டக் களத்தில், இறுதி நாட்களில் இயக்கத்தவர்கள் புகுந்து விட்டார்கள். அவர்களால் தான் கலவரமும், வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது என்று அதிகாரவர்க்கமும், காவல்துறையும் தொடர்ந்து சொல்லி வருகின்றன. இயக்கத்தவர்கள் அருகில் உங்கள் பிள்ளைகளை நெருங்க விடாதீர்கள், அவர்கள் உங்கள் குழந்தைகளை மூளைச்சலவை செய்து அப்படியே அள்ளிக்கொண்டு சென்று விடுவார்கள், எனவே போராட்டம் கீராட்டம் என்று பிள்ளைகளை வீதிக்கு அனுப்பிவிடாதீர்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை போன்ற தொனியில் மிரட்டவும் செய்கின்றன. அதோடு இனி வரும் காலங்களில் வீதிக்கு வந்து போராட நினைக்கும் சாமான்யர்களுக்கு, என்ன மாதிரியான பரிசு காத்திருக்கும் என்பதனை ஒரு செய்முறை விளக்கமும் செய்து காண்பித்திருக்கின்றன.

காவல்துறை சொல்வது போல் கடைசி நாளில் இயக்கத்தவர்கள் புகவில்லை. தமுக்கத்தில் தினமும் சுற்றிப் பார்த்த வகையில், முதல் நாளில் இருந்தே ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தான் இருந்தார்கள். அவுட்போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரையான சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதில் பல்வேறு இயக்கத்தினரும், பல அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களும் கூட களத்தில் இருந்தனர். இவர்கள் யாரும் தங்கள் அரசியல் அடையாளத்தை வெளிக்காட்டாமல் “ஜல்லிக்கட்டு”, “முல்லைப்பெரியாறு”, “காவிரி”, “பணமதிப்பிழப்பு” என்று பொதுவான தமிழர் பிரச்சனைகளை முன் வைத்தே போராட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம், சிலம்பம், நாட்டுப்புறப்பாட்டு, தப்பாட்டம் என்று கலைநிகழ்ச்சிகள் போன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தன. வந்திருந்த கூட்டம் மிரண்டு திரும்பிச் செல்கின்ற வகையில் தீவிரமான அரசியல் கோஷங்களின்றி, கேளிக்கையுடன் கூடிய கவனமீர்ப்பு செயல்பாடுகள் தான் அதிக அளவில் நடந்து கொண்டிருந்தன. அதனால் தான் தொடர்ந்து தினமும் பொதுமக்கள் குழந்தை குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து ஆதரவினைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.  மைக் பிடித்து பேசுபவர்களில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு, வரம்பு மீறிப் பேசிய பொழுது, கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினரே அதனை ஆட்சேபித்து, பொதுவான விஷயங்களை மட்டும் பேசுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர்.

பொதுவாக அமைதியாகவும், சுவாரஸ்யம் குறையாமலும், ஒற்றை மையப்புள்ளியான ஜல்லிக்கட்டினை சுற்றி லேசாக மற்ற பொதுவான பிரச்சனைகளை தொட்டு மட்டுமே போராட்டக்களம் இயங்கிக் கொண்டிருந்தது. சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களே இதனை உணர்ந்து கொள்ளும் போது, இருபத்தி நான்கு மணிநேரமும் மூன்று ஷிப்ட் போட்டு மஃப்டியில் பணியாற்றிக் கொண்டிருந்த உளவுத்துறை நண்பர்களுக்கு, இலக்கை நோக்கி மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்த போராட்டத்தின் வீச்சு, அரசியல் சாயம் எதையும் கலக்கவிடாமல் மாணவர்கள் போராட்டத்தினை கொண்டு சென்ற திசை, யார் கட்டுப்பாடும் இல்லாமல் தானாக நடந்து கொண்டிருந்த ஒழுங்கமைவு, மாணவர்களின் சலித்துக் கொள்ளாத உற்சாக மனோதிடம், போராட்டம் மெதுமெதுவாக பொது மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்த நேர்மறை தாக்கம், அதானால் நாளுக்கு நாள் பெருகிய ஆதரவு எல்லாம் தெரியாமலா இருக்கும்.

இதுவரை நாம் பார்த்த போராட்டங்கள் எல்லாம் இரண்டு வகை தான். ஒன்று நிறுவனமாக்கப்பட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் அடையாள எதிர்ப்பு. சாலை மறியல் என்றால் இன்று காலை ஒன்பது மணிக்கு சாலை மறியல் என்று தலைவர் அறிவித்து விட்டு ஒரு பொது இடத்தில் தொண்டர்களோடு கூடுவார். சரியாக, அங்கேயே சென்று காவல்துறை அவர்களை சாலை மறியல் செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறும். இவர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து முன்னமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாகனங்களில் ஏறிக் கொள்வர். காவல்துறை அவர்கள் அனைவரையும் கைது செய்ததாய் அறிவித்து, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்து, மதிய உணவு வாங்கிக் கொடுத்து, மாலையில் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடும்.  இன்னொரு வகை, தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சாமனியர் பேசத் துணியாத தீவிரமான கோரிக்கைகள். இதற்காக போராடும் சிறு எண்ணிக்கையிலான போராட்டக்காரர்கள் நாள் முழுதும், தொண்டைத் தண்ணீர் வற்ற சாலையோரங்களில் கத்திக் கொண்டிருப்பார்கள். பொதுமக்கள் அவர்களை சட்டையே செய்ய மாட்டார்கள். காவல்துறை வந்து அவர்களை கதறக் கதற அடித்து இழுத்துச் செல்லும். தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல மக்கள் அதனை வேடிக்கை பார்ப்பர்கள்.

ஜல்லிக்கட்டை முன் வைத்து நடந்த இந்தப் போராட்டம், இந்த இரண்டு வகையிலும் மாறுபட்டு இருந்தது. இதில் முதன்மையானது மாணவர்களின் தன்னெழுச்சி. எந்த உள் ஆதாயமும் இல்லாமல், நேர்மையான நோக்கத்தோடு தமிழர் பண்பாடான “ஜல்லிக்கட்டை” நடத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை.  இதனை முன்னெடுத்த மாணவர்கள் எந்தவொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளோ, வேறு இயக்கங்களோ, நடிகர்களோ, தனி நபர் பிரபலங்களோ தங்களின் போராட்டத்தை திசை திருப்பி விட்டுவிடாதபடியும், அபகரித்துக் கொள்ள முடியாதபடியும், நீர்த்துப் போகச் செய்ய முடியாதபடியும், களங்கம் ஏற்படுத்திவிடாதபடியும் உணமையாகப் போராடினர். அதே சமயம் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக போக்குவரத்தினை சரிசெய்தல், போராட்டக் களத்தை தாங்களே சுத்தம் செய்தல், போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் என்று போராட்டம் குறித்த நேர்மறைக் கருத்தினை பொதுத்தளத்தில் பரவலாக்கினர். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவையாவும் திட்டமிடப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, நல்ல பிம்பம் ஏற்படுத்த வேண்டும் என்று விளம்பர நிறுவனங்களை நியமித்து அரசியல் தலைவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் இமேஜ் பூஸ்டிங் போன்று அல்லாமல், தன்னியல்பாய் ஒளிவிட்ட நற்பண்புகள்.

இன்னொரு மிக முக்கியமான அம்சம் சமூக ஊடங்கள். இது நாள் வரை கண்டதையும் கழியதையும் தாங்கி வந்த வாட்ஸப் ஃபார்வேர்டுகள் தான் பேர் பாதிக்கும் அதிகம்.  ஆனால் ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பரவலாக்க இந்த சமூக ஊடகங்கள் தான் துணை நின்றன. போராட்டத்திற்கு இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரண்ட இரவு, ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களை கலைப்பதாய் நினைத்துக் கொண்டு அந்தப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்த, அங்கிருந்த ஆயிரக்கணக்கான பேர்களும் தங்கள் மொபைல் டார்ச்சை ஆன் செய்து கையை உயர்த்திய காட்சி, அதனைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் மயிர்க்கூச்சரியும் தருணமாகவே அமைந்தது. அது போக தொடர்ச்சியாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம், பெருகும் ஆதரவு ஆகியவை வழக்கமான அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைக் காட்டிலும் மிக வேகமாகவும், உள்ளது உள்ளபடியும் மக்களின் உள்ளங்கைகளுக்குள் சென்று சேர்த்தன சமூக ஊடகங்கள். இப்போராட்டத்திற்கு சமூக ஊடகங்கள் மூலமும், வாய்வார்த்தைகள் மூலமும் கிடைக்கப்பெற்ற நல்ல பிம்பத்தின் அடிப்படையிலேயே அரசியல் சாராத தன்னார்வ நிறுவனங்களும், அமைப்பு சாராத பொதுமக்களும், அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை தங்குதடையின்றி வழங்கத் துவங்கினர்.

எல்லாம் சரி, இவ்வளவு சிறப்பாக நடந்தேறிய, நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று நிகழ்வாக பதிவாக வேண்டிய இந்தப் போராட்டம் ஏன் வெற்றி முழக்கங்களோடும் கொண்டாட்டங்களோடும் நிறைவு பெற முடியவில்லை. அரசும் காவல்துறையும் சொல்வது போல கலகக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஏன் வெற்றிக் கோட்டை நெருங்கும் நாள் வரை காத்திருந்து, சட்டமியற்றப் போகும் இறுதி நாள் அதிகாலையில் வன்முறையைத் துவங்க வேண்டும்.  அத்தகைய தேவையோ கட்டாயமோ இல்லாத பட்சத்தில் அதற்கான வாய்ப்பு இருந்திருக்காது என்று தான் தோன்றுகிறது.

இன்னொரு பக்கம், காவல்துறையினர் மூலமாக அதிகாரவர்க்கத்தினரே, இந்த வன்முறை நாடகத்தை துவங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்க மனமில்லாதவர்கள் சொல்லும் காரணம், அரசு மாணவர்களை ஒடுக்க நினைத்தால் முதல் நாளிலேயே கூட்டத்தைக் கலைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருக்கலாமே. ஏன் இறுதி நாள் வரை காத்திருந்து, அதுவும் ஒருபக்கம் மாணவர்களின் கோரிக்கையை அப்படியே ஏற்று சட்டம் இயற்றிவிட்டு, இன்னொரு பக்கம் தடியடியை நடத்த வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடனேயே போராட்டத்தை முடித்திருந்தால் அரசின் மீதான நன்மதிப்பு கூடும் தானே.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அல்லது ஆளக் கனவு கண்டுகொண்டிருக்கும் எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், அது எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் வீதிக்கு இறங்கிப் போராடும் அதிருப்தியாளர்களை முளையிலேயே கிள்ளி எறியவே எண்ணுவார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தைப் பொறுத்த வரை, தமிழகத்தில் நடக்கின்ற அசாதாரணமான அரசியல் நிகழ்வுகள், அவற்றின் மீது ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் இருக்கும் வெளிக்காட்ட முடியாத வெறுப்பு பூடகமாக அரசுக்கும் தெரிந்தே இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் உணர்வெழுச்சியில் திரண்டிருந்த மாணவர்களின் மீது கைவைக்க நேர்திருந்தால், அனைத்து தரப்பு மக்களிடமும் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கும். மாணவர்கள் தானே, இரண்டு நாட்கள் கத்தி விட்டு கலைந்து சென்றுவிடுவர் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். விளைவு, கோரிக்கையை நிறைவேற்றுகின்ற அளவுக்குச் சென்றுவிட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நகர்வு எப்பொழுதும் தஙகளிடமிருந்து தான் வரவேண்டும் என்பது அதிகாரவர்க்கத்திற்குத் தெரியாதா என்ன? அதனால் தான் ஒரு வாரமாய் சூடிக் கொண்டிருந்த முகமூடியை கழற்றி வைத்துவிட்டு, தன் இயல்பான கோர முகத்தைக் காட்டி விட்டது. போராட்டக்களத்தில் இரவு பகலாய் இருந்துவிட்டு, இப்பொழுது மயிரிழையில் தடியடியிலிருந்து தப்பித்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கும் தான் சொல்ல வேண்டிய செய்தியை கச்சிதமாக ஒளிபரப்பிவிட்டது, அதிகாரவர்க்கம்.

தனது இந்த விளையாட்டுக்கு யாரைப் பணயமாக வைப்பது என்று திரைக்கதையை எழுதியவர்களுக்குத் தெரியாதா என்ன? யாருடைய பெயரைச் சொன்னால் பொதுமக்கள் சட்டை செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று சொல்வார்களோ, யாரைக் கதறக் கதற அடித்து இழுத்துச் சென்றாலும், பொதுமக்கள் தங்களுக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல வேடிக்கை பார்ப்பார்களோ, அவர்களையே பணயமாக வைத்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அதிகாரம் நேரடியாகவே தன் பிரஜைகளுக்கு அறிவுரை வழங்குகிறது, “உங்களைத் ’தோழர்’ என்று அழைப்பவர்களின் தொடர்பினை துண்டியுங்கள் !”.


******

No comments:

Post a Comment